வியாழன், 17 டிசம்பர், 2009

பாபாஜி என்ற மகான்

பாபா திரைப்படம் வெளிவந்த பிறகு “மகான் பாபாஜி” பற்றி சில செய்திகள் பகிரங்கமாகயுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தவர் பாபாஜி என்பது குறித்தும் சர்ச்சைகள் எழுகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய “THE AUTO BIOGRAPHY OF A YOGI” என்கிற நூல், யோகக் கலையின் அதிநுட்பங்களை உலகுக்கு உணர்த்திய ஒரு அற்புதமான புத்தகம்.

‘ஒரு யோகியின் சுய சரிதம்’ என்று தமிழில் வெளிவந்துள்ள இப்புத்தகம், பாபாஜி பற்றிய அறிய தகவல்கை அளிக்கிறது.

இதோ அதிலிருந்து சில பகுதிகள்…

பத்ரிநாராயணுக்கருகில் வடக்கு இமய மலையின் செங்குத்தான பாறைகள் லாஹிரி மகாசயரின் குருவான பாபாஜி வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கின்றன.

தனிமையில் வாழும் அந்த மகான் தன் ஸ்தூல ரூபத்தைப் பல நூற்றாண்டுகளாக, ஒருகால் பல்லாயிரம் ஆண்டுகளாகவோ வைத்துக் கொண்டிருக்கிறார். மரணமற்ற பாபாஜி ஒர் அவதாரமாவார்.

“பாபாஜியின் ஆன்மீக நிலை மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது,” ஸ்ரீ யுக்தேஸ்வர் எனக்கு விளக்கினார்.

“மனிதனின் குறுகிய பார்வை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நட்சத்திரமாகிய அவரை ஊடுருவிப் பார்க்க முடியாது. அந்த அவதாரம் அடைந்துள்ள நிலையை ஒருவன் ஊகிக்க முயல்வது கூட வீண்தான். அது கற்பனைக்கு அப்பாற்பட்டது.”

உபநிஷதங்கள் ஆன்மீக முன்னேற்றத் தின் ஒவ்வொரு நிலையையும் நுட்பமாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கின்றன.

ஒரு சித்தர் (பூரணத்துவம் அடைந்தவர்) என்பவர் ஜீவன் முக்தர் (வாழும் பொழுதே முக்தியடைந்தவர்) என்ற நிலையிலிருந்து பராமுக்தர் (தலையாய முக்தி – மரணத் தின் மீது முழு ஆதிக்கம்) நிலைக்கு முன்னேறியவர்.

இந்த இரண்டாவது நிலை யில் உள்ளவர் மாயையின் வலையி லிருந்தும் அதனுடைய பிறவிச் சுழற்சியிலிருந்தும் முழுவதுமாக தப்பி விட்டவராவார்.

ஆதலால், பராமுக்தர் அரிதாகவே ஸ்தூல தேகத்திற்குத் திரும்புகிறார். ஒருவேளை அப்படித் திரும்பினால் பூவுலகிற்கு வானுலக அருளின் சாதனமாக தெய்வீக நியமனம் பெற்ற ஓர் அவதாரமாகிறார்.

ஓர் அவதார புருஷர் உலக நடப்பிற்கு உட்பட்டவரல்லர். ஒளி பிம்பமாகத் தோன்றும் அவரது பரிசுத்தமான தேகம் இயற்கைக்கு எவ்வகையிலும் கடன்படுவதிலிருந்து விடுதலை பெற்றுள்ளது.

பாரதத்தில் பாபாஜியின் நோக்கம்,

தீர்க்கதரிசிகளுக்கு அவர்களுடைய சிறப்புக் காரியங்களை நடத்த உதவுவதாகும்.

எனவே, அவர் சமய நூல்களில் வகைப் படுத்தியுள்ள மகாவதாரம் என்ற பிரிவிற்குப் பொருந்தியவராகிறார்.

சன்னியாச பரம்பரையைத் திருத்தி அமைத்த ஆதிசங்கரரும், புகழ்பெற்ற மத்திய கால மகானான கபீருக்கும் பாபாஜி யோக தீட்சையை அளித்ததாகக் கூறியுள்ளார்.

நமக்குத் தெரிந்த வரையில், மறைந்து விட்டிருந்த கிரியா கலையை மறுமலர்ச்சி பெறச் செய்த லாஹிரி மகாசயர், பாபாஜியின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கிய சீடராவார்.

பாபாஜி கிறிஸ்துவுடன் என்றும் தொடர் புள்ளவர். அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக் கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இந்த யுகத்திற் கான முக்தியளிக்கும் ஆன்மீக யுக்தியையும் திட்டமிட்டுள்ளார்கள்.

பூரண அனுபூதி பெற்ற இவ்விரு குருமார்களின் – உடலுடன் ஒருவரும்,

உடலின்றி ஒருவரும் செய்துவரும் பணியானது, யுத்தங்கள், இனத்துவேஷம், மத உட்பிரிவுகள், எறிந்தவனையே திரும்பத் தாக்கும் (Boomerang) லோகாயத் தீமைகள் ஆகியவற்றைத் தவிர்ப் பதற்காக உலக நாடுகளை ஊக்குவித்தலாகும்.

பாபாஜி நவீன காலத்தின் போக்கை, முக்கியமாக மேலை நாகரிகத்தின் செல்வாக் கையும் சிக்கல்களையும் நன்கு அறிந்தவர். மேலும் ஆத்ம விடுதலைக்கான யோகத்தை மேலை மற்றும் கீழை நாடுகளில் சமமாகப் பரப்ப வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.

வரலாற்று ஏடுகளில், பாபாஜி பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லையே என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்க வேண்டிய தில்லை.

அந்த மகான் எந்த நூற்றாண்டிலும் வெளிப்படையாகத் தென்பட்டதில்லை. அவருடைய, சகாப்தங்களுக்கேற்ற திட்டங் களில் தவறாகக் கணிக்கப்படும் விளம்பர வெளிச்சங்களுக்கு இடமில்லை. தனித்த ஆனால், மௌன சக்தியான படைப்பவனைப் போலவே பாபாஜி எளிய மறைவிலேயே செயல்படுகிறார்.

ஒரு வரலாற்று நிபுணருக்குப் பிரிய மானவைகளான, பாபாஜியின் குடும்பம், பிறந்த இடம் இவைகளை அறுதியிட்டுக் கூறும் எந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுவாக, அவர் பேச்சு இந்தியில் இருக்கிறது. ஆனால் அவர் எம்மொழியிலும் சுலபமாக உரையாடுகிறார். பாபாஜி (வணக்கத்திற்குரிய தந்தை) என்ற எளிய பெயரையே அவர் ஏற்றுள்ளார்.

லாஹிரி மகாசயரின் சீடர்களால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையைக் குறிக்கும் பட்டங்கள்; மகாமுனி பாபாஜி மகராஜ் (உயர்ந்த பேரானந்தப் பெருமான்), மகாயோகி (உயர்ந்த யோகி) மற்றும் த்ரயம்பக் பாபா அல்லது சிவ பாபா (சிவ அவதாரங் களின் பட்டங்கள்) முதலியன.

முழுமையாக விடுதலை அடைந்து விட்ட ஒரு மகானின் பரம்பரைப் பெயரைப் பற்றி நமக்குத் தெரியா விட்டால்தான் என்ன?

“பாபாஜியின் பெயரை பக்தி யுடன் யார் எப்பொழுது உச்சரித் தாலும் அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசையை ஈர்க்கிறான்,” என்று லாஹிரி மகாசயர் கூறியுள்ளார்.

சிரஞ்சீவித் தன்மை பெற்ற இந்த குரு, அவரது உடலில் வயதைக் குறிக்கும் அடையாளங்களைப் பெறவில்லை. அவர் இருபந்தைந்து வயதிற்கு மேற்படாத இளைஞராகவே தோற்றமளிக்கிறார்.

சிவந்த நிறமும், நடுத்தர உயரமும், பருமனுமுள்ள பாபாஜியின் எழிலும் வலுவும் கொண்ட தேகம், காணக் கூடிய பிரகாசத்தை வீசுகிறது. அவருடைய கண்கள் கருமையும், சாந்தமும், கருணையும் கொண் டுள்ளன. நீளமான, ஒளிரும் கேசம் தாமிர நிறத்தில் உள்ளது.

சில சமயங்களில் அவருடைய முகம் லாஹிரி மகாசயருடையதை மிகவும் ஒத்திருக்கிறது. லாஹிரி மகாசயர் தன் வயதான காலத்தில், இளவயதுத் தோற்றத்துடனிருக்கும் பாபாஜியின் தகப்பனார் என்று

கூறப்படுமளவிற்கு சில சமயங்களில் இவ்வுருவ ஒற்றுமை மிக ஆச்சரியமாக இருந்தது.

ஸ்வாமி கேவலானந்தர் இமாயலத்தில் பாபாஜியுடன் சில காலம் கழித்திருக்கிறார்.

“இணையற்ற அந்த மகான் தன் குழுவுடன் மலைகளில் இடம் விட்டு இடமாகச் சென்று கொண்டிருப்பார்,” என்று ஸ்வாமி கேவலானந்தர் என்னிடம் கூறினார்.

“பாபாஜி தான் விரும்பும் பொழுது மட்டுமே மற்றவர்கள் அவரைக் காண்பதோ அல்லது அடை யாளம் கண்டுகொள்வதோ சாத்தியம். அவர் தன் வெவ்வேறு பக்தர்களுக்கு சிறு மாறுதல்களுடன் அனேக உருவங்களில் – சில சமயங்களில் தாடி, மீசையுடனும் சில சமயங்களில் அவை இல்லாமலும் – தரிசனம் தந்திருப்பதாக அறிகிறோம்”.

“சிதைவு அடைய முடியாத அவரது

உடலிற்கு உணவு ஏதும் அவசியமில்லை. ஆதலால், அவர் அரிதாகவே உண்கிறார். சமுதாய வழக்கத்திற்கேற்ப அவரிடம் வரும் சீடர்களிடமிருந்து எப்பொழுதாவது பழங்களையும், பாலும் நெய்யும் கலந்து சமைத்த அன்னத்தையும் ஏற்றுக் கொள்வதுண்டு”.

“பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத மான சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன்,” கேவலானந்தர் தொடர்ந்தார், “ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள் சுட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.

“ஐயா, எவ்வளவு கொடூரம்!” அங்கிருந்த லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.

“அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன் கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை நீ பார்க்க வேண்டும்?”

இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப் படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின் தோளின் மேல் வைத்தார். “வேதனை நிறைந்த மரணத் திலிருந்து உன்னை நான் இன்றிரவு விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின் மூலமாக கர்மவினையின் விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது.”

இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே ஏறுவதற்குரிய ஒரு பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்க திறனுடன் அவன் ஏறி வந்துவிட்டான்.

“ஐயா, தாங்கள்தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும்” அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. “செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக் கணக்கில் இடை விடாமல் தங்களைத் தேடிக் கொண்டி ருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.”

மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டு தலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து பயனில்லை.’

“அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது,” பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.

அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத் தான பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான். அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி கட்டளையிட்டார்.

அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன் குருதேவர் தன் கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார். அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ் சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

“நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்” உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்’.

“இயசுவிற்கு முதலிலிருந்தே தன் வாழ்க்கைச் சம்பவங்களின் நிகழ்வு நிரல் தெரிந்தே இருந்தது. அவர் தம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஏற்றது அவருக்காக அல்ல; எந்த கர்ம வினையின் கட்டாயத்தினாலும் அல்ல. ஆனால் சிந்தனையுள்ள மனிதர்களை மேம்படுத்த வேண்டும் என்பதற் காகவேதான்.

விவிலிய போதனையாளர் நால்வர் – மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் – பின்னால் வரும் தலைமுறைகளுக்காகவே விவரிக்க முடி யாத அந்த நாடகத்தை ஏட்டில் பதித்தார்கள்.

பாபாஜிக்கும் கூட இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஆகிய சார்புகள் கிடையா. ஆரம்பத்திலிருந்தே அவருடைய வாழ்வின் கட்டங்களையும் அவர் அறிந்திருந்தார்.

மக்களின் வரையறைக்குட்பட்ட அறிவிற் கேற்றபடி தன்னை அமைத்துக் கொண்டு, ஒன்று அல்லது பல சாட்சிகளின் முன்னிலை யில் அவர் தம் தெய்வீக வாழ்வின் பல அங்கங்களை நிகழ்த்தியிருக்கிறார்.


Nanri: www.thannambikkai.net

3 கருத்துகள்:

  1. பரங்கிபேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்கு சென்று உள்ளிர்களா..

    பதிலளிநீக்கு
  2. Vanakkam Vinoth Gowtham,

    Varugai thanthamaikku Nanri.
    Tharpothu Naan Dubai il pani puriyum Kaaranathaal, Sella mudiyavillai.
    Adutha varudam, Sella virukkiren.
    Ithu samanthamaaga, thangallukku yerpatta anuvathai pagirnthu kolaalaamay!!!!

    பதிலளிநீக்கு
  3. துபாய்ல எங்க இருக்கிங்க..
    முடிந்தால் கால் பண்ணவும்..

    050-4382662

    பதிலளிநீக்கு